Tuesday, 2 June 2009

ஹெலிகாப்டர் (சிறுகதை போட்டிக்காக)


அந்த யுத்த பூமியில் ஹெலிகாப்டர் சப்தமும் , குண்டுகள் சப்தமும் ஆச்சர்யமில்லை..

ஹெலிகாப்டர் சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்தனர் குட்டியும் அவன் அக்கா நீனுவும். குட்டிக்கு ஹெலிகாப்டர் என்றால் கொள்ளை பிரியம். விளையாடுவதற்கு கூட ஹெலிகாப்டர் பொம்மை தான் வேண்டும் என்று தன் அப்பாவிடம் அடம்பிடிப்பான். ஹெலிகாப்டர் சத்தம் கேட்டால் உரக்க கத்திக்கொண்டு டாட்டா காமிப்பான்.

குட்டிக்கு எப்படியாவது அந்த ஹெலிகாப்டரில் பறக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது ..

ஓடிசென்று தன் அம்மா விஜியின் கையை பிடித்து இழுத்தான்..

"அம்மா வாமா அதுல போகலாம்..!"

"அக்கா அத பாருங்களேன், அதுல எனக்கு பறக்கணும் போல இருக்கு, அம்மாகிட்ட சொல்லி என்ன கூட்டிட்டு போக சொல்றயா?

"நீங்க எல்லாம் வரமாட்டிங்க. ! நா அப்பாகிட்ட சொல்லி போய்க்கிறேன்..! அம்மா, அப்பா எப்ப ஊரில் இருந்து வருவாரு சொல்லுமா ?"

விஜியின் முகத்தில் எந்த சலனமும் இல்லை. நேற்றுதான் அவளின் கணவனின் உயிரை எங்கிருந்தோ வந்த குண்டு ஒன்று துளைத்தது. அதனை நேரில் பார்த்த விஜிக்கு அககனம் உயிரே போய்விட்டது. இங்கு வாழ்வதை விட இறந்து விடலாம் என்று முடிவெடுத்து செல்லும் சமயத்தில் குட்டி, நீனுவின் எதிர்காலம் தடுத்தது!.

தம் மக்கள் எல்லாரும் புலம் பெயருகிறார்கள் என்று அறிந்த பிறகு அவளால் அங்கு இருக்க முடியவில்லை.மனதை கல்லாகிகொண்டு தம் மக்களுடன் தன் மண்ணை விட்டு கிளம்புகிறாள் விஜி.

என்ன செய்வது பிறந்த மண்ணை விட்டு எங்கு சென்று வாழ்ந்தாலும் பிணங்கள் தானே....!

அந்த கடற்கரையில் அமர்ந்திருந்த மக்கள் கடலையே வெறித்து பார்த்துகொண்டிருந்தனர். தன் சொந்தங்களை இழந்து மீதம் இருந்த உயிரை கையில் பிடித்துக்கொண்டு எங்கேயாவது சென்று பிழைத்துக்கொள்ளலாம் என்று ஏங்கிகொண்டிருண்டிருந்த மக்களின் துயரத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

தூரத்தில் தெரிந்த படகு ஒன்று அவர்களை நோக்கி வந்தது .

உயரத்தில் பறந்துகொண்டிருந்த ஹெலிகாப்டரை நோக்கி டாட்ட காட்டிகொண்டிருந்த் குட்டியை படகில் ஏற்றினாள் விஜி.

"அம்மா... அம்மா.. நம்ம அதிலே போக முடியாதா ? ..." ஏக்கத்தோடு கேட்டான் குட்டி.

"இல்லடா செல்லம்..... நம்ம அதுல போக முடியாது, நீ இங்கேயே இரு நான் போய் அக்காவை கூட்டிட்டு வர்றேன்", என்று சொல்லி நீனுவை அழைத்து வந்து படகில் அமரவைத்தாள்.

அமைதியாக புறப்பட்டது படகு அடுத்து நடகவிருக்கும் கொடுமையை அறியாமல்...

சிறிது தூரம் சென்ற பிறகு காற்று பலமாக வீச ஆரம்பித்தது. படகு நீரில் தடுமாற, படகில் இருந்த எல்லாரும் கட்டுபாட்டை இழந்து கடலில் விழ ஆரம்பித்தார்கள்.

எங்கிருந்தோ வந்த ஹெலிகாப்ட்டர் ஒன்று அவர்களை நோக்கி பறந்து வந்தது.

விஜி தன் கரங்களில் குட்டியை இறுக்கமாக பிடித்துகொண்டாள்.

"நீனு இங்க பாருமா! அம்மாவை நல்ல பிடிச்சுக்கோ" என்று சொன்ன அடுத்த கனம் அது நடந்தது. படகு முழுவதுமாக கடலில் கவிழ்ந்தது. அதே சமயம் நீரில் தத்தளித்து கொண்டிருந்த விஜியையும், சிலரையும்
ஹெலிகப்டேரில் வந்தவர்கள் மீட்டனர்.

விஜியை பிடித்துகொண்டிருந்த குட்டியும், நீனுவும் அங்கு இல்லை. விஜி கதறி அழுதுகொண்டே அருகில் பார்த்த பொது குட்டி ஓரத்தில் நின்றுகொண்டு பயத்தில் நடுங்கிகொண்டிருந்தான். இதை பார்த்த விஜி ஓடி சென்று குட்டியை தழுவிகொண்டாள்.

அதே சமயம் தூரத்தில், நீனுவின் "அ
ம்மா.. அம்மா.. காப்பாத்துமா... " என்ற குரல் கேட்டு துடி துடித்து போனாள் விஜி. அந்த குரல் மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்தது, குரல் மட்டும் அல்ல... நீனுவும் தான்...

கண்முன்னால் தன் மகளை இழந்த விஜி இடிந்து போய் நின்று கொண்டிருந்த சமயத்தில்,

நடந்த விபரீதம் அறியாத குட்டி கை தட்டி கொண்டே உரத்தகுரலில் கடலை நோக்கி கத்தினான்

"அக்கா நாங்க இப்ப
ஹெலிகப்டேரில் இருக்கோமே....நீயும் சீக்கிரமா வாக்கா .."


இந்த கதை ‘உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது